அவனும் அவளும் சந்தித்துக்கொண்ட பிறகு,
கண்களை மூடியவன்
மிகவும் அழகான பெண் என்று
அவளைக் கற்பனை செய்கிறான்
அவளும் கண்களை மூடி
தன்னை உண்மையாக நேசிக்கும் மனிதன் என்று
அவனைக் கற்பனை செய்கிறாள்
அவனும், அவளும்
இவர்களுடன், அழகான பெண்ணும்
உண்மையாய் நேசிக்கும் மனிதனுமாக
அவர்கள் நான்கு பேரும்
படுக்கையில் இருக்கிறார்கள்
நீங்கள் எதிர்பார்த்ததைப்போல்
நெருக்கடியான நகரத்தின் சாலைகளில்
சிக்கித் தவிக்கும் பொறுமையற்றவர்களாகி
படுக்கையறை எங்கும்
அலைந்து திரிகிறார்கள்
எதிர்ப்படும் மூடிய முகங்களிலிருந்து
குறிப்பெடுப்பதற்கு
மனதைப் பக்கங்களாகத் திறக்கின்றனர்
துயரம்
அச்சம்
கற்பனை
பலவீனம் என, எல்லையற்ற குறிப்புகள்
தானாகவே வந்து பக்கங்களை நிரப்பத்தொடங்குகின்றன
காத்திருந்ததைப்போல
பக்கங்களின் மறைவான பகுதிகளில்
பதுங்கிக்கொள்கின்றன
தனிமைப்படுத்தலிலிருந்து
ஒரு தனித்துவமான தூரத்தில்
ஏதோ சொல்வதற்குத் துடிக்கும் அவசரத்தில்
மனதின் பக்கங்கள் படபடத்து அடிக்கத்தொடங்கின
மனதோடு உரையாடுவது எளிதானதாக
இருக்க வேண்டும்
ஆனால், அவர்களின் மனங்களுக்கிடையிலான
இழுபறி வலுக்கத்தொடங்கியது
ஒருவரையொருவர் கொல்லும் வெறியோடு
நடந்து முடிந்த
அந்த வழமையான நிகழ்ச்சியில்
சோர்ந்துபோன உடல்களோடு
படுக்கையறையில் இருவர் மட்டுமே
எஞ்சியிருந்தனர்
நான்கு பேர் சந்திப்பதும்
இருவர் காணாமல் போவதுமாகத்
திக்கற்ற காட்டுப்பாதையில்
பரபரப்போடு தொடர்ந்தது அவர்களின் பயணம்
கற்பனையான வானத்திலிருந்து
புதைமணலில் விழுந்த
இரண்டு முதியவர்கள்,
சலித்த நடையில் எட்டுவைத்து
அவர்களைப் பின்தொடர்ந்தபடியே இருக்கின்றனர்
கடந்தகாலங்களும்
அடிக்கடி அவர்களைச் சந்திக்கத் தொடங்குகிறது
எப்போதும் நான்கு பேர்கொண்ட
கூட்டுக் குடும்பம் அவர்களுடையது
இந்தக் கதையைச் சொல்வதற்குத்தான்
ஒவ்வொரு முறையும்
அவனும் அவளும் சந்தித்துக்கொண்டனர்.