புத்தகத்தின்
அனைத்துப் பக்கங்களிலும்
சுற்றித் திரியக்கூடிய
ஒரு குருவியை,
சில சொற்களைக் கொண்டு
எழுதவேண்டும்.
சொற்கள் சம்மதித்தன
சில நிபந்தனைகளோடு.
கடைசிப் பக்கத்திற்கு
செல்ல முடியாது என்றன சில,
ஏன் என்றேன்
அத்தோடு புத்தகம்
மூடப்பட்டுவிடும்
முதல் சில பக்கங்களிற்கு
போக மறுத்தன சில,
திறப்பவர்களை மகிழ்விக்கும்
வாழ்த்துக்களைப் பாட வேண்டும்
என்றன.
வாசிப்பவர்கள்
இடையிடையே
துரத்தக்கூடாது என்றன சில,
பறந்து காட்டும்படியோ
கூவிக்காட்டும் படியோ
கட்டாயப்படுத்தக்கூடாது என்றன சில,
புரியவில்லை என
குற்றம் சுமத்தக்கூடாது என்றன சில,
புரிகிறது என்று
அதிக பிரசங்கம் கூடாது
என்றன சில,
கடைசியில்,
எஞ்சிய சொற்களைப்
பார்க்கிறேன்.
குருவி செய்ய அவை போதுமாக இல்லை.
சில எறும்புகளைச் செய்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாக
புத்தகமெங்கும் ஊரத்தொடங்கின.
புரியாதவர்கள்
தலைப்பைப் பார்க்கவும்.