காலப்போக்கில்,
பலருடைய கனவுகளை இணைத்து
போக்குவரத்து விஸ்தரிக்கப்படும்
என்ற அறிவிப்போடு,
வெள்ளோட்டமாக
அந்த இருவரின் கனவுகளுக்கிடையே
ஒரு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில்
தற்செயலாக அவர்களின் கண்கள்
சந்தித்துக் கொண்ட பின்பு,
மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும்
இரண்டு பெரும் நகரங்கள் அவை
ஆம்,அந்தக் கனவுகளைத்தான் சொல்கிறேன்.
அவளின் கனவுக்குள்ளிருந்து
புறப்பட்டுச் செல்லும்போது ஆண்களையும்
அவனின் கனவுக்குள்ளிருந்து
புறப்பட்டுச் செல்லும்போது பெண்களையும்
ஏற்றிப் பயணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டது
பெண்களாக மாறி அவனுடைய கனவுக்குள்ளோ
ஆண்களாக மாறி அவளுடைய கனவுக்குள்ளோ
இறங்கிவிட முடியாமல்,
திருநங்கைகள் சிலர் தவித்தபடி
ரயிலில் பயணிப்பதைக் கண்டபின்,
புத்தகங்கள் வாசிப்பதற்கு
ரயிலில் தடைவிதிக்கப்பட்டது
புத்தகங்களில் வசிப்பவர்கள் வெளியேறி
பயணிகளைப்போல் நடித்துக்கொண்டிருப்பதாக
டிக்கட் பரிசோதகர்
முறைப்பாடு செய்திருந்ததே பிரதான காரணம்
அவனோ,அவளோ கனவு காணும்வரை
பல கிராமங்களையும்
பல நகரங்களையும்
ஓயாது சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ரயில்,
பலரை ஏற்றுவதும் இறக்குவதுமாக
இரவில் தொடங்கி இரவிலே முடிகிறது
'இனியொருபோதும்
கனவுகள் காண்பதில்லை' என
அவள் அறிவிப்பதற்கு
சில மணிநேரங்களுக்கு முன்புதான்
அவனுடைய கனவுக்குள்ளிருந்து
கடைசியாக அந்த ரயில் புறப்பட்டிருந்தது
இப்போது, ஒரு விபத்தை
ரயில் எதிர்நோக்கிச் செல்கிறது என்பதை
அறிகிறோம் அல்லவா...
உடனடியாக அதிலுள்ள பயணிகளை
காப்பாற்றியாக வேண்டும்
உங்களுக்குத் தெரிந்த யாராவது
அந்த ரயிலில் பயணம் செய்தால்
அவசரமாக செய்தியை தெரியப்படுத்துங்கள்
இதை வாசித்துக்கொண்டிருக்கிற நீங்கள்
அல்லது உங்கள் நண்பர்கள்,உறவினர்கள் யாராவது
இப்போது கனவு கண்டுகொண்டிருந்தால்
தயவு செய்து அனுமதிதாருங்கள்
அல்லது அவர்களிடம்
அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள்
இந்த ரயிலைக் கொண்டுபோய்
பாதுகாப்பாய் நிறுத்த.
அதிலும், பெண்களின் கனவு என்றால்
இன்னும் வசதியாக இருக்கும்.