அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
றியாஸ் குரானா
இதுதான் எனது பெயர்.
நல்லவேளை, அதில் இரட்டைக் கொம்பு இல்லை
இருந்திருந்தால் இலகுவாக
மாடென்று சொல்ல முடிந்திருக்கும்.
ஒற்றைக் கொம்பும் இல்லை
அதனால், என்னைக் கிண்டல் செய்ய
ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தை
கண்டுபிடிக்கும் சிரமமும் உங்களுக்கில்லை.
வெள்ளிக்கால் பூட்டிய நொண்டி என
உங்களால் கொம்பவும் முடியாது
ஏனெனில் 'ஊ' வென்னாவும் அதிலில்லை.
காமா என தவறுதலாக வாசிக்கக்கூட
ஒரு கமாவையும் காணவில்லை.
வட எழுத்து 'ஸ' இருப்பதால்
நான் தமிழனல்ல என்று சொன்னாலும்
யாரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
எனது பெயரில் அதிகமான புணர்ச்சிகள் இருப்பதால்
நீங்கள் அழைத்தால்
நான் தயார் என்பதால்
அதுவும் சாத்தியமில்லை
எப்படி என்னைக் கேவலப்படுத்தப் போகிறீர்கள்?
எனது மதிப்பிற்குரிய எதிரிகளே
நீங்கள் மிக மோசமாக களைப்படைந்திருக்கிறீர்கள்
ஆகவே, எதற்குப் பயன்படுத்துவதென்று தெரியாமலும்
அதிகம் பாவிக்கப்படாமலும் தமிழில் இருக்கின்ற
அஃகன்னாவை எடுத்துவந்து
அரவுக்குப் பக்கத்தில் போட்டு உக்காருங்கள்
றினாவில் இருக்கும்
விசிறியை எடுத்து வீசிக்கொள்ளுங்கள்
உங்களைப் பார்க்க பரிதாபமாய் இருக்கிறது
இதற்குப் பிறகும்
உங்கள் எதிரியாகவே என்னை உணர்ந்தால்
என்னைத் தண்டிப்பதற்கு
ஒரு ஆலோசனை சொல்கிறேன்
அந்த இஸ்ஸென்னாவைப் பாருங்கள்
அதிலொரு குத்து இருக்கிறதல்லவா
அதைப் பயன்படுத்தி
என்னைக் குத்திக் குதறலாம்
விரும்பினால், நண்பர்களும்
முதுகில் குத்தலாம்
அதற்காகவே அந்த குத்தை
விட்டு வைத்திருக்கிறேன்.
மேலதிகத் தகவலொன்று...
எனது பெயரிலிருக்கும்
'ரானா'வை வாசித்துவிட்டு
முக்கியமான சில எழுத்தாளர்கள்
ரஜனியின் திரைப்படம் வெளிவந்துவிட்டதென
மகிழ்ச்சியடைந்ததாக அறிகிறேன்.